Site icon Tamil News

இந்திய கடற்படையின் பிரம்மாண்ட போர் பயிற்சி: 2 போர்க் கப்பல்கள், 35 போர் விமானங்கள் பங்கேற்பு

இந்திய கடற்படை சார்பில் அரபிக்கடலில் பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள், 35-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் இந்த போர் பயிற்சியில் பங்கேற்றன.

அண்மை காலமாக இந்திய பெருங்கடலில் கால்பதிக்க சீனா தீவிர முயற்சி செய்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான், மியான்மர், தாய்லாந்து, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் துறைமுக மேம்பாட்டு திட்டங்கள் என்ற பெயரில் மறைமுகமாக சீனாவின் கடற்படைத் தளங்களை அமைக்க அந்த நாடு தீவிரம் காட்டி வருகிறது.

சீனாவின் சதித் திட்டங்களை ராஜ்ஜிய மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் இந்தியா முறியடித்து வருகிறது.

இந்த சூழலில் சீனாவுக்கு சவால்விடுக்கும் வகையில் இந்திய கடற்படை சார்பில் அரபிக் கடலில் நேற்று பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது.

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இதில் விக்ரமாதித்யா ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. ஐஎன்எஸ் விக்ராந்த் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டதாகும்.

விக்ரமாதித்யா, விக்ராந்த் ஆகிய விமானந்தாங்கி போர்க்கப்பல்களும், 6 நாசகார போர்க்கப்பல்களும் அரபிக் கடலில் நேற்று அதிகாலையில் கம்பீரமாக அணிவகுத்து சென்றன.

அப்போது 35-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் விக்ரமாதித்யா, விக்ராந்த் போர்க்கப்பல்களில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தன. இந்திய ராணுவத்தை சேர்ந்த எம்எச்60ஆர், காமோவ், சீ-கிங்,சேத்தக் ரகங்களை சேர்ந்த ஹெலிகாப்டர்களும் போர்க்கப்பல்களில் இருந்து மேல் எழும்பின.

இதுகுறித்து இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் விவேக் கூறும்போது, “நாட்டின் பாதுகாப்பு, இந்திய பெருங்கடல் பகுதி பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரம்மாண்ட போர் பயிற்சி நடத்தப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட போர் பயிற்சிகளில் இது மிகவும் முக்கியமானது. ஒரே நேரத்தில் 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன” என்று தெரிவித்தார்.

இந்திய கடற்படை வட்டாரங்கள் கூறியதாவது: சீனாவிடம் 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. அந்த நாட்டுக்கு இணையாக இந்தியாவிடமும் விக்ரமாதித்யா, விக்ராந்த் ஆகிய 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் உள்ளன. இவை நடமாடும் போர் தளங்கள் ஆகும். இரு போர்க்கப்பல்களில் இருந்தும் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை வெற்றிகரமாக இயக்க முடியும். இரவு நேரத்திலும் விமானங்களை தரையிறக்கி சாதனை படைத்துள்ளோம்.

அடுத்ததாக ஐஎன்எஸ் விஷால் என்ற விமானந்தாங்கி போர்க்கப்பல் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கொச்சியில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த போர்க்கப்பல் 2030-ம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணையும். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏராளமான நாசகார போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் கடற்படையில் இணையும். அப்போது இந்திய கடற்படையின் பலம் மேலும் அதிகரிக்கும்.

Exit mobile version