இந்தியா – இறுதிச் சடங்குகள் தொடர்பாக மோதல்… தந்தையின் உடலில் பாதியைக் கேட்ட மூத்த சகோதரன்

இரு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்துவதில் விநோதச் சிக்கல் ஏற்பட்டது.
இருவரில் ஒரு சகோதரர் தந்தையின் உடலில் பாதியைத் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் திகம்கர் மாவட்டத்தைச் சேர்ந்த தயானி சிங் கோஷ் (84 வயது) என்ற முதியவர், இரு தினங்களுக்கு முன் உடல்நலக் குறைவால் காலமானார்.
இதையடுத்து, தன் வீட்டில் இருந்தபோது தந்தை காலமான தகவலை தயானி சிங்கின் இளைய மகன் தேஷ்ராஜ், தனது அண்ணன் கிஷனுக்குத் தெரிவித்தார்.
தம்பியின் வீட்டுக்கு வந்த அண்ணன் கிஷன், தனது தந்தையின் இறுதிச்சடங்கைச் செய்ய தயாரானபோது, தேஷ்ராஜ் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது.
இருவருக்கும் இடையே தகராறு மூண்டு, முற்றிப்போன நிலையில், மதுபோதையில் இருந்த கிஷன், இறுதிச்சடங்கைச் செய்ய தனது தந்தையின் உடலில் பாதியையாவது தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினார்.
இதையடுத்து, தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூத்த மகன் கிஷனைச் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அழைத்துச் சென்றதை அடுத்து, இளைய மகன் தேஷ்ராஜ் தனது தந்தையின் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்தார்.