Site icon Tamil News

இலங்கையில் முன்னாள் காதலியின் ஆசை வார்த்தைக்கு மயங்கிய இளைஞன் : பின்னர் நேர்ந்த சோகம்!

ஹொரணை பகுதியில் இளைஞர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹொரணை, ஹல்தொட்ட தலாவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனுக்கு அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார். இவர்கள் இருவரும் சுமார் 04 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்துவந்த நிலையில், குறித்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், சந்தேகத்திற்குறிய குறித்த பெண்  கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு குறித்த இளைஞனை தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் கூறி அந்த இளைஞனை அப்பெண் அழைத்துள்ளதுடன், அவரைப் பார்க்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞர் பெண்ணின் அறிவுறுத்தலுக்கு அமைய அவருடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.  அப்போது குறித்த பெண் இளைஞரை, ஒரு அறையில் தங்குமாறு கூறியதாகவும், ஆள் நடமாட்டம் இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு வருவதாக கூறி வெளியேறியுள்ளதாகவும் தெரிக்கப்படுகிறது.

பின்னர், வீட்டில் மறைந்திருந்த பெண்ணின் கணவரும் மற்றுமொரு நபரும் திடீரென அத்துமீறி உள்ளே நுழைந்து தாக்கியதாக அந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த இளைஞரை அவ்விடத்திலிருந்து விடுவிக்க 50,000 ரூபா கப்பம் கோரியுள்ளதுடன், இளைஞரிடம் இருந்த ஏடிஎம் அட்டை மற்றும் 25,000 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணும் மற்றைய நபரும் தன்னை வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிக்காமல் பலவந்தமாக அங்கேயே வைத்திருந்ததாகவும் இளைஞன் குறிப்பிட்டுள்ளார்.

மீதி 25,000 ரூபாய்க்கு பதிலாக தனது கைத்தொலைபேசியையும் எடுத்துச் சென்றதுடன், குறிப்பிட்ட காலத்திற்குள் அதனை மீட்காவிட்டால், அந்த தொலைபேசியை தன்வசமாக்கி கொள்ளும் வகையில் கடிதம் ஒன்றை எழுதி வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த வீட்டில் இளைஞன் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் துரித கதியில் செயற்பட்ட மில்லனியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கணவன் மற்றும் மனைவியை கைது செய்துள்ளனர்.

தாக்குதலால் காயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக ஹொரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர இளைஞரை தாக்க பயன்படுத்திய மண்வெட்டி கைப்பிடி, பிளவுபட்ட திரைச்சீலை கம்பி, துடைப்பம் கைப்பிடி, இடல் கைப்பிடி, பலாப்பழம் போன்றவற்றை போலீசார் மீட்டுள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் ஹொரணை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மில்லனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Exit mobile version