இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறியதா : கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு அதிகரித்துள்ள அழுத்தம்!
காசாவில் நடந்த போரின் போது இஸ்ரேல் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறியதா என்பது குறித்து கன்சர்வேடிவ் அரசாங்கம் பெற்றுள்ள சட்ட ஆலோசனையை வெளியிட வேண்டும் என்று பிரிட்டனின் முக்கிய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
சட்டம் மீறப்பட்டிருந்தால், இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை இங்கிலாந்து தடை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
பிரிட்டன் இஸ்ரேலின் உறுதியான நட்பு நாடாகும், ஆனால் ஏறக்குறைய ஆறு மாத காலப் போரில் அதிகரித்துள்ள இறப்பு எண்ணிக்கை இருநாட்டு உறவுகளை சீர்குலைத்துள்ளது.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சனைச் சேர்ந்த ஏழு உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதில் இருந்து ஆயுத ஏற்றுமதியை நிறுத்துவதற்கான அழைப்புகள் அதிகரித்துள்ளன.
பிரதான எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் டேவிட் லாமி, “சர்வதேச சட்டத்தை இஸ்ரேல் மீறியதாக மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார். சட்ட ஆலோசனையை இப்போதே வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல் இரண்டு சிறிய எதிர்க்கட்சிகளான மத்தியவாத லிபரல் டெமாக்ராட்ஸ் மற்றும் பிரிவினைவாத ஸ்காட்டிஷ் தேசிய கட்சி ஆகியவை இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுத்தன.