பாலஸ்தீனிய ஆண்களை அரை நிர்வாணமாக்கி நடுத்தெருவில் முடக்கிய இஸ்ரேல் – ஹமாஸ் கடும் கண்டனம்
இஸ்ரேலிய படைகளால் பாலஸ்தீனிய ஆண்கள்அரை நிர்வாணமாக நடுத்தெருவில் முடக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து, அதற்கு எதிராக ஹமாஸ் அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான மோதலில் இருதரப்பினரும் போர்க் குற்றங்களில் ஈடுபடுவதாக பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர். தற்போது கைதான பாலஸ்தீனியர்களை கண்ணியமற்ற வகையில் நடத்துவதாக இஸ்ரேல் படைகள் மீது ஹமாஸ் குற்றம்சாட்டி உள்ளது. காசா வீதிகளில் உள்ளாடைகள் மட்டுமே அணிந்த பாலஸ்தீனிய ஆண்கள் அமர்ந்துள்ள புகைப்படங்கள் வெளியானதை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச அளவிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.
வெளிநாடு ஒன்றில் மறைந்து வாழும் ஹமாஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான இஸ்ஸாத் எல்-ரெஷிக் என்பவர், இந்த விவகாரத்தில் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும், அந்த ஆண்கள் அனைவரும் ஹமாஸ் உட்பட எந்தவொரு போராளி குழுவையும் சார்ந்தவர்கள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் எனவும் அவர் விவரித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ”சர்வதேச மனிதாபிமான சட்டத்தின்படியும், மனிதாபிமானம் மற்றும் கண்ணியத்துடனும், கைதிகள் அனைவரும் நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளது.
லண்டனை பின்புலமாக கொண்ட அரபு மொழி செய்தி நிறுவனமான அல்-அரபி அல்-ஜதீத், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தங்களது செய்தியாளரான தியா கஹ்லவுட் என்று விளக்கமளித்துள்ளது. அவர் உட்பட அப்பாவி காசா ஆண்களை இஸ்ரேல் கைது செய்ததற்கும், கண்ணியமற்ற வகையில் நடத்தியதற்கும் அந்த ஊடகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழு என்ற அமைப்பினரும் கைதான செய்தியாளர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இணையத்தில் இந்த படங்கள் வெளியானதில், அதில் இடம்பெற்றிருக்கும் பலரும் சாமானிய பாலஸ்தீனியர்கள் என அவர்களின் உறவினர்கள் முறையிட்டு வருகின்றனர். வர்ஜீனியாவில் வாழும் பாலஸ்தீனிய அமெரிக்கரான ஹனி அல்மதூன், அந்த அரை நிர்வாண கூட்டத்தில் தனது உறவினர்களை அடையாளம் கண்டதாகவும், அவர் ஹமாஸ் உட்பட எந்தவொரு போராளி குழுவோடும் தொடர்பு இல்லாத அப்பாவி என்றும் முறையிட்டுள்ளார்.
”இஸ்ரேல் படைகளின் படுகொலை வேட்டைக்கு அஞ்சி பள்ளிக்கட்டிடம் ஒன்றில் தஞ்சம் புகுந்த அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான இந்த கொடூரமான குற்றத்தை அம்பலப்படுத்த மனித உரிமை அமைப்புகள் உடனடியாக தலையிட வேண்டும். அவர்களை விடுவிக்க அனைத்து வகையிலும் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்று இணையத்திலும் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவான பிரச்சாரம் வேகமெடுத்துள்ளது.