Site icon Tamil News

புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்க கோட்டாபய ராஜபக்ச தீர்மானம்

புதிய அரசியல் கட்சிக்கு ஆதரவளிக்க முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தேசிய பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய சகா மற்றும் பலமான வர்த்தகர் ஒருவரின் தலைமையில் இயங்கும் மௌபிம ஜனதா கட்சிக்கு கோட்டாபய ராஜபக்ச ஆசி வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் தனது பதவியை இராஜினாமா செய்த கோட்டாபய ராஜபக்ச, இழந்த தனது பிம்பத்தையும் நற்பெயரையும் கட்டியெழுப்பவும், பலப்படுத்தவும் முயற்சித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கான அனைத்து சலுகைகளையும் அவர் அனுபவித்து வருகிறார்.

மௌபிம ஜனதா கட்சியின் அரசியலமைப்பு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் அலுவலக வட்டாரங்களை மேற்கோள்காட்டி அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

வியத்மக போன்று புதிய உறுப்பினர் சேர்க்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மௌபிம ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஹேமகுமார நாணயக்கார பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தி குறித்து, சம்பந்தப்பட்ட தொழிலதிபர் தனது முகநூல் கணக்கில் ஒரு குறிப்பை பதிவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version