நியூ கலிடோனியாவில் பிரான்ஸ் அவசர நிலை பிரகடனம்: கலவரத்தில் நால்வர் பலி!
நியூ கலிடோனியாவில் மே 15ஆம் திகதியன்று நடந்த கலவரத்தில் மூன்று பழங்குடியினரும் காவல்துறை அதிகாரி ஒருவரும் இறந்ததை அடுத்து, அங்கு அவசரநிலையை பிரான்ஸ் பிரகடனம் செய்துள்ளது.
கிட்டத்தட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக நம்பப்படும் குறைந்தது நால்வர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிரெஞ்சு அதிகாரிகள் கூறினர்.கலவரத்தில் 64 அதிகாரிகள் காயமடைந்தனர்.
கலவரத்தில் ஈடுபட்டோர் தீவெங்கும் உள்ள சாலைகளில் தடுப்புகளைப் போட்டுள்ளனர்.இதனால் அங்குள்ள மக்களுக்கு மருந்து, உணவு ஆகியவற்றை விநியோகிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலவரத்தின்போது வாகனங்கள் தீமூட்டப்ட்டு, கடைகள் உடைக்கப்பட்டு பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.இதையடுத்து, பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.கலவரத்தைத் தடுக்க பிரெஞ்சு அதிகாரிகள் நியூ கலிடோனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நியூ கலிடோனியாவில் உள்ள இரண்டு விமான நிலையங்களிலும் துறைமுகத்திலும் ஆயுதப் படை அதிகாரிகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அவசரநிலை அறிவிக்கப்பட்டதன் மூலம் மக்கள் ஒன்றாகக் கூடுவதையும் தீவெங்கும் பயணம் செய்வதையும் தடை செய்ய அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பசிபிக் தீவான நியூ கலிடோனியாவை பிரான்ஸ் ஆட்சி செய்து வருகிறது.அங்கு குறைந்தது பத்து ஆண்டுகளாக வசித்து வரும் பிரெஞ்சுக் குடிமக்கள், மாநிலத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று பிரெஞ்சு நாடாளுமன்றம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது.இதற்கு நியூ கலிடோனியாவைச் சேர்ந்த பழங்குடியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
நியூ கலிடோனியா மாநிலத் தேர்தலில் பிரெஞ்சுக் குடிமக்கள் வாக்களித்தால் அது தங்களை வெகுவாகப் பாதிக்கும் என்றும் தங்கள் குரல் மூழ்கடிக்கப்படும் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.