எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : நாட்டு மக்களின் கருத்துக்களை பெற நடவடிக்கை!
நியூடைமன் மற்றும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து குறித்து நாட்டு மக்களின் கருத்துக்களை பெறுவதற்கும், அது தொடர்பான பத்திரிக்கை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் இரண்டு வார கால அவகாசம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு வரும் செவ்வாய்க்கிழமை கூடவுள்ளது. இதன்போது குறித்த கப்பல் தொடர்பில் ஆராய்ந்து தேவையான விதப்புரைகளை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு கடந்த வாரம் அதன் தலைவர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில் முதல் தடவையாக கூடியது. குழுவின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த அடிப்படை விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகளை தவிர்ப்பதற்கும் அவ்வாறான அவசர நிலையை எதிர்கொள்வதற்கும் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்தக் குழு பரிந்துரைகளை வழங்கும் என்றும் தலைவர் தெரிவித்தார்.
குழுவின் கவனத்தில் கொள்ளவேண்டிய விடயங்கள் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை பெறுவதற்கும் அது தொடர்பான பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதற்கும் இரண்டு வார கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.