பங்களாதேஷில் ஒரு மாதத்திற்குப் பிறகு திறக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள்
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை வெளியேற்றுவதற்கு வழிவகுத்த மாணவர்கள் தலைமையிலான போராட்டத்தை மையமாகக் கொண்ட வன்முறை காரணமாக நாடு முழுவதும் பல்கலைக்கழகங்கள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்ட பின்னர் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.
வேலை ஒதுக்கீட்டு முறையை சீர்திருத்தக் கோரி சமீபத்திய இயக்கத்தின் போது வெடித்த மோதல்களைத் தொடர்ந்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பங்களாதேஷில் உள்ள கல்வி நிறுவனங்கள் ஜூலை 17 அன்று காலவரையின்றி மூடப்பட்டன.
கல்வி அமைச்சு தனது அதிகார வரம்பிற்குட்பட்ட நிறுவனங்களை மீண்டும் திறக்க வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. ஒரு மாத கால விடுமுறைக்குப் பிறகு அனைத்துக் கல்வி நிறுவனங்களும் திறக்கப்பட்டன.
டாக்காவை தளமாகக் கொண்ட பெங்காலி செய்தி சேனலான சோமோய் டெலிவிஷனின் கூற்றுப்படி, “தலைமை ஆலோசகர் முஹம்மது யூனுஸின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து ஆகஸ்ட் 18 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க சம்பந்தப்பட்ட அனைவரும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்” என்று செயலாளர் மொசம்மத் ரஹிமா அக்தர் தெரிவித்தார்.
காலையில், பள்ளி மாணவர்கள் சீருடையில் தங்கள் நிறுவனங்களுக்குச் செல்வதைக் காண முடிந்தது.