வருங்காலத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசிக்குமாறு பிலிப்பைன்ஸுக்கு சீனா எச்சரிக்கை!
தங்களுக்கு இடையிலான உறவின் வருங்காலத்தைப் பற்றி தீவிரமாக ஆலோசிக்குமாறு சீனா, பிலிப்பீன்சை எச்சரித்துள்ளது.
இருநாட்டு உறவு, ஒரு முடிவெடுக்கவேண்டிய நிலையில் இருப்பதாக சீனா எடுத்துரைத்தது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பீப்பல்ஸ் டெய்லி நாளிதழில் வெளியான கருத்துக் கட்டுரையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
தென்சீனக் கடலில் பதற்றம் தொடரும் நிலையில் அக்கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன.
அண்மை மாதங்களில் பிலிப்பீன்ஸ், சீனா இரண்டுக்கும் சொந்தமான கரையோரக் காவல்படைக் கப்பல்களும், வேண்டுமென்றே ஒன்றுடன் ஒன்று மோதுவதாக இருநாடுகளும் குறைகூறி வருகின்றன. கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட வன்முறை கலந்த பூசலில் பிலிப்பீன்சைச் சேர்ந்த கப்பல் ஊழியர் ஒருவர் கை விரலை இழந்தார். அச்சம்பவம், தென்சீனக் கடலில் இருநாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல்களில் அடங்கும்.
சீனா, பிலிப்பீன்ஸ் இரண்டும் தங்களுக்கிடையிலான நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு பூசல்களை நல்ல முறையில் கையாளும் முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஆனால் தென்சீனக் கடலில் தொடரும் பூசல்கள் அத்தகைய முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
“சீனா-பிலிப்பீன்ஸ் தொடர்புகள் ஒரு முக்கியக் கட்டத்தில் இருக்கின்றன. எந்தப் பாதையில் செல்லவேண்டும் என்ற முடிவெடுக்கும் நிலை இது,” என்று பீப்பல்ஸ் டெய்லியில் வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
சீனா-பிலிப்பீன்ஸ் உறவின் வருங்காலதைப் பற்றி மணிலா தீவிரமாக ஆலோசிக்கவேண்டும் என்றும் இருதரப்பு உறவை மீண்டும் சரியான பாதையில் கொண்டுசெலுத்த பிலிப்பீன்ஸ், சீனாவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது.