ட்ரம்ப் மீது கொலை முயற்சி: தாக்குதல்தாரி குறித்து வெளியான தகவல்கள்
வரும் நவம்பர் 5 ஆம் திகதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் தேர்தல் பரப்புரையில் இன்று ஈடுபட்டிருந்தார் டொனால்டு டிரம்ப். அப்போது அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் அவரது வலது காதின் மேல் துப்பாக்கியின் குண்டுகள் உரசிச்சென்றன. உடனடியாக தனது காதை பிடித்துக்கொண்டு டிரம்ப் கீழே அமர்ந்துவிட்டார்.
உடனடியாக, அங்கிருந்த சிறப்பு பாதுகாப்புப் படையினர் டிரம்ப்பை அங்கிருந்து எழுப்பினர். அப்போது, டிரம்பின் வலது காதில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில், பாதுகாப்புப் படையினர் அவரை காரில் ஏற்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி உள்ளன.மேலும், பேரணியில் பங்கேற்ற ஆதரவாளர் ஒருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் பெயரை FBI வெளியிட்டுள்ளது.அதன்படி துப்பாக்கி சூடு நடத்தியவர், பேத்தல் பார்க் பகுதியைச் சேர்ந்த தாமஸ் மேத்யூ குரூஸ் என்ற 20 வயது இளைஞர் என்று தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் பார்வைக்கு உள்ள பென்சில்வேனியா மாநிலத்தின் நீதிமன்ற ஆவணங்களில் சந்தேக நபருக்குக் குற்றவியல் பின்னணி இருந்ததாகத் தெரியவில்லை. கொலை முயற்சிக்குப் பின்னால் இருக்கக்கூடிய காரணத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குரூக்ஸ், குடியரசுக் கட்சிக்காரர் என்று வாக்காளர் பதிவுகள் ஒன்றில் தெரியவந்துள்ளது. எனினும், அவர் ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் தளமான ஆக்ட்புலூ மூலம் தேர்தல் இயக்கம் ஒன்றுக்கு 15 டொலர் நிதி வழங்கியதாகவும் அமெரிக்காவின் மத்திய அரசாங்கத்தின், பிரசாரம் தொடர்பான நிதிக் கணக்குகளில் தெரியவந்தது.
பட்லர் நகரில் டிரம்ப்பின் பிரசாரக் கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு அப்பால் உயர்வாக இருந்த இடத்திலிருந்து சந்தேக நபர் சுட்டார் என்று அமெரிக்க உளவுத் துறை கூறியது. தாக்குதல்காரர் என்று சந்தேகிக்கப்பட்ட வெள்ளை இன இளைஞர் ஒருவரின் உடலுக்கு அருகே சட்ட ஒழுங்கு அதிகாரிகள் ஏஆர்-15 ரக துப்பாக்கி ஒன்றைக் கண்டெடுத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.