Site icon Tamil News

ரஷ்யாவுக்கு அதிகாரப்பூரவ பயணம் மேற்கொண்டுள்ள அன்வார் இப்ராகிம்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் ரஷ்யாவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.செப்டம்பர் மாதம் 4ஆம் திகதி மாலை அவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்திப்பார் என்றும் செப்டம்பர் 5ல் செய்தியாளர்களைச் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

விவசாயம், உணவுப் பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு முதலியவை தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களும் கலந்துரையாட இச்சந்திப்பு வகை செய்யும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

“இந்தச் சந்திப்பு மலேசியாவுக்குப் பேரளவில் பலனளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக, மலேசியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, நல்லுறவை இது வலுப்படுத்தும்,” என்று பிரதமர் அன்வார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யாவை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் குரல் எழுப்பின.ஆனால், அன்வாருக்கு முன்பு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஸீ ஜின்பிங், வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ, மியன்மார் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலேங் ஆகியோர் அதிபர் புட்டினைச் சந்தித்துவிட்டனர்.

அதிபர் புட்டின் மீது மேற்கத்திய நாடுகள் சுமத்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுகளை ஆசியத் தலைவர்கள் பலர் ஏற்கவில்லை என்பதை இது உணர்த்துவதாகக் கூறப்படுகிறது.இதற்கிடையே, ரஷ்யாவின் துணை முஃப்தி ருஷான் ஹஸ்ரத்தைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் செப்டம்பர் 4ஆம் திகதியன்று ரஷ்யாவில் சந்தித்தார்.

மலேசியாவை வளர்ச்சி அடைந்த முஸ்லிம் நாடாக முஃப்தி ருஷான் வர்ணி்த்தார்.மலேசியாவிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருப்பதாக அவர் கூறினார்.

பிரதமர் அன்வாருடனான சந்திப்பின்போது ரஷ்யாவில் உள்ள முஸ்லிம்களுக்கு அதிபர் புட்டினின் வலுவான ஆதரவு இருப்பதாக முஃப்தி ருஷான் தெரிவித்தார்.இஸ்லாமிய சமயம் மீதும் புனித குர்ஆன் மீதும் அதிபர் புட்டின் மரியாதை வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டா. பாலஸ்தீனர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதில் கடப்பாடு கொண்டுள்ளதாகப் பிரதமர் அன்வாரும் முஃப்தி ருஷானும் தெரிவித்தனர்.

Exit mobile version