வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு பேருந்தில் ஏற்பட்ட பரிதாப நிலை
ஜெர்மனியில் இருந்து இலங்கை சென்ற பெண் பேருந்தில் பணம் உள்ளிட்ட அனைத்து பொருட்களை பறி கொடுத்துவிட்டு கடும் நெருக்கடிக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
23 வயதுடைய ஜேர்மன் யுவதியின் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் அடங்கிய பயணப் பொதியை யாரோ திருடிச் சென்றதாக குருநாகல் தலைமையகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பேருந்தில் பயணித்த வேளையில் தனக்கு தூக்கம் வந்துள்ளதாகவும், குருநாகல் நகரில் இருந்து இறங்கி எழுந்து பார்த்த போது தனது பயணப் பொதிகள் காணாமல் போனதைக் கண்டதாகவும் யுவதி குறிப்பிட்டுள்ளார்.
தனது பையில் பெறுமதியான பொருட்கள் உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளதாக குருநாகல் தலைமையக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு கடவுச்சீட்டு, கைத்தொலைபேசி, டேப் கம்ப்யூட்டர் மற்றும் பத்தாயிரம் ரூபா பணமும், பெருந்தொகை யூரோவும் தனது பையில் இருந்ததாக அவரது முறைப்பாட்டில் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நாட்டிற்கு வருகை தந்திருந்த ஜேர்மன் யுவதியின் பயணப் பையை திருடியவர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், குருநாகல் தலைமையகப் பொலிஸாரின் சுற்றுலாப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தான் தற்போது நிற்கதியான நிலைக்குள்ளாகியுள்ளதாக ஜெர்மன் யுவதி ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார். இப்படி ஒரு சம்பவத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் என தான் எதிர்பார்க்கவில்லை என அவர் கூறியுள்ளார்.