Site icon Tamil News

ஜனாதிபதி மற்றும் உலக வங்கி தலைவர் இடையே விசேட கலந்துரையாடல்

அமெரிக்க விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் மிகவும் பயனுள்ள கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பொதுச் சபையின் அனுசரணையில் நடைபெற்ற நிலையான அபிவிருத்திக்கான உயர்மட்ட அரசியல் மன்றமான “நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான மாநாடு – 2023” இல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்குபற்றினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி தற்போது நியூயோர்க் சென்றுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78வது அமர்வு செப்டம்பர் 18 முதல் 21 வரை நடைபெற உள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி அமர்வில் தனது விசேட உரையை ஆற்றவுள்ளார்.

2030 ஆம் ஆண்டிற்கான மாற்றியமைக்கும் மற்றும் விரைவான நடவடிக்கைகளுக்கான வழிகாட்டுதல்களை உலகத் தலைவர்கள் வழங்கும் பொதுச் சபை அமர்வுடன் இணைந்து செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறும் 2023 நிலையான வளர்ச்சி இலக்குகள் உச்சிமாநாட்டில் பங்கேற்கவும் ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் மாநாட்டில் கலந்துகொள்ளும் பல அரச தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்த உள்ளார்.

அங்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version