Tamil News

அடுத்தடுத்து 4 முறை மாரடைப்பு; கொழுப்பு அறுவை சிகிச்சையால் பிரேசில் மாடல் அழகிக்கு நேர்ந்த விபரீதம்

பிரேசில் நாட்டின் மாடல் யுவதி ஒருவர் அழகு பராமரிப்புக்கான அறுவை சிகிச்சையால், அடுத்தடுத்து நேரிட்ட 4 மாரடைப்புகளில் பரிதாபமாக உயிரிழந்தார்.

29 வயதாகும் லுவானா ஆன்ட்ரே பிரேசில் தேசத்தின் பிரபல மாடல்களில் ஒருவர். மாடல்களின் முதலீடு அவர்களின் வாளிப்பான உடற்கட்டு என்பதால், அதனை பேணிப் பராமரிக்க லுவானாவும் ஏகப் பிரயத்தனம் மேற்கொண்டிருந்தார். ஜீரோ சைஸ் தேகத்தை பராமரிப்பதில் சக பெண்களுக்கு முன்னோடியாகவும் அடையாளம் காணப்பட்டார்.

அழகு பராமரிப்புக்கு வழக்கமான உடற்பயிற்சி, உணவூட்டம் மட்டுமன்றி அறுவை சிகிச்சையையும் லுவானா நம்பியிருந்தார். இதற்காக அண்மையில் ’லிப்போசக்‌ஷன்’ எனப்படும் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு உரிய ரிஸ்க், அழகு சிகிச்சையில் சற்று அதிகம் என்ற போதும் துணிந்து இறங்கினார்.

Brazilian influencer suffers cardiac arrests after liposuction surgery,  dies - India Today

பிரேசிலின் பிரபல தனியார் மருத்துவமனையில், லுவானா காலில் உள்ள கொழுப்பினை நீக்கும் அறுவை சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டது. மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டு அதன் பின்னர் அவரது உடலின் அதிகப்படி கொழுப்பு நீக்கத்துக்கான அறுவை சிகிச்சை நடைமுறைகள் தொடங்கின. ஆனால் அதற்கான நடைமுறைகளில் எழுந்த தடுமாற்றம் அல்லது அவை லுவானாவுக்கு ஒத்துக்கொள்ளாது போனது உள்ளிட்ட ஏதோ சில தவறுகளால் அறுவை சிகிச்சையின்போது சிக்கல் எழுந்தது.

அவற்றின் உச்சமாக அடுத்தடுத்து 4 முறை மாரடைப்பு நேரிட்டதில், லுவானா உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனபோதும் சிகிச்சை பலனின்றி அடுத்த நாளே அவர் இறந்தார். அழகு பராமரிப்புக்காக பிரேசிலுக்கு அப்பாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக லுவானாவுக்கு அபிமானிகள் அதிகம். அவர்கள் மத்தியில் லுவானாவின் அகால மரணம் துயரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கூடவே, அழகு சிகிச்சைக்குள் ஒளிந்திருக்கும் அபாயத்தையும் லுவானாவின் மரணம் உணர்த்தி உள்ளது.

Exit mobile version