Site icon Tamil News

பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் படிமம்

பிரேசில் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்த கனமழையால், 5,00,000க்கும் அதிகமான மக்கள் வீடு வாசலை விட்டு இடம் பெயர்ந்தனர். அந்த நாடே வெள்ளக்காடாக காட்சியளித்தது. இந்நிலையில், ரியோ கிராண்டே டோ சுலில் என்ற இடத்தில் உள்ள சாவோ ஜோனோ டோ போலசின் நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட வெள்ள அரிப்பில், சுமார் 233 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் புதை படிமம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஃபெடரல் யுனிவர்சிட்டி ஆஃப் சாண்டா மரியாவின் பழங்கால ஆராய்சியாளாரான ரோட்ரிகோ டெம்ப் முல்லர் தலைமையிலான குழு இந்த படிமானத்தை கண்டுபிடித்தது. இந்த படிமானமானது ஹெர்ரெராசௌரிடே என்ற டயனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது என்று ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர். ஆராய்சியாளார்களின் இந்த கண்டுபிடிப்பானது டயனோசர்களின் வாழ்க்கை முறை, அதன் அழிவுக்கான காரணம் பற்றிய விரிவான ஆய்வுக்கும் வழிவகுக்கலாம் என்கிறார்கள்.

ட்ரயாசிக் காலத்தில் பூமியில் சுற்றித் திரிந்த ஹெர்ரெராசௌரிடே டயனோசர் இரு கால்களைக் கொண்டது என்றும், இதன் கூர்மையான நகங்கள் இரையைப்பிடிக்க பயன்பட்டுள்ளன என்றும் இதன் கால்கள் எட்டு அடி நீளம் கொண்டதாக இருக்கவேண்டும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும் வெள்ளப்பெருக்கினால், சில படிமானங்கள் அழிந்தும் இருக்கலாம் என சொல்லப்படுகிறது. எனினும், கிடைத்த படிமானங்களை பாதுகாக்க ஆராய்சியாளார்கள் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கண்டுபிடிப்பு, பூமியின் வரலாற்றில் மறைக்கப்பட்ட அத்தியாயங்களை எப்படியான சூழ்நிலைகளிலும் நம்மால் கண்டறிய முடியும் என்பதற்கான சான்றாக சொல்லப்படுகிறது.

Exit mobile version