Site icon Tamil News

2.9 பில்லியன் கடன் இலங்கைக்கு கிடைக்குமா : முடிவை அறிவிக்கும் சர்வதேச நாணய நிதியம்!

கடன் மறுசீரமைப்புக்கான எழுத்து மூல உத்தரவாதத்தை அனைத்து தரப்புகளும் வழங்கியுள்ள நிலையில், இலங்கைக்கான 2.9 பில்லியன் டொலர் நிதியுதவிக்கான  உத்தரவாதத்தை சர்வதேச நாணய நிதியம் செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.

இந்த அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றையும் வழங்க உள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சாதகமான தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் 2022 ஆம் ஆண்டு  மார்ச்  மாதம் நடுப்பகுதியில்  தீர்மானித்தது.

அதன் பின் நாட்டில் அந்நியச் செலாவணி நெருக்கடி தீவிரமடைந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் நடுப்பகுதியில், வெளிநாட்டுக் கடனைச் செலுத்தும் திறன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், மின்வெட்டு, உணவுப் பற்றாக்குறை, மருந்துகளை வாங்குவதில் உள்ள சிரமங்கள், பணவீக்கம், ரூபாயின் வீழ்ச்சி மற்றும்  வறுமை  அதிகரிப்பு போன்ற பல பிரச்சினைகளை இலங்கை எதிர்க்கொண்டது.

இந்நிலையில், பாரிய மக்கள் போராட்டங்களால் இலங்கை ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி துறந்தார். இதனையடுத்து மிகுந்த அரசியல் போட்டி ஏற்பட்டது. பல பதற்றங்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைவராக பொறுப்பேற்றார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள், கடன்மறுசீரமைப்பு உத்தரவாதங்கள் சர்வதேச நாணய நிதியத்திற்கு நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், மக்கள் மத்தியில் விரக்தியையே ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version