ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பணிப்புரியும் 150,000 இலங்கையர்கள்: அதிக வேலைவாய்ப்புகளுக்கு வாய்ப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலித் நாசர் அல்அமெரி ஆகியோருக்கு இடையில் இன்று (16) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
கலந்துரையாடலின் போது, இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் உறுதிப்பாட்டை தூதுவர் அல்அமெரி மீண்டும் உறுதிப்படுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
புதிய அரசியல் கட்டமைப்பின் கீழ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் சிறந்த முதலீட்டு வாய்ப்புகள் தற்போது உள்ளதாகவும் தூதுவர் காலித் நாசர் அல்அமெரி சுட்டிக்காட்டினார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்போது சுமார் 150,000 இலங்கையர்கள் பணிபுரிந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த வேலை வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவதுடன், இலங்கை நிபுணர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் இலங்கையுடனான தனது வர்த்தக உறவுகளை விரிவுபடுத்த தயாராக இருப்பதாகவும், இது தொடர்பாக புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் தூதுவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களைச் சந்திக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அழைப்பு விடுத்த தூதுவர், அவ்வாறான தொடர்புகள் இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்த நல்லதொரு களமாக அமையும் எனத் தெரிவித்தார்.