Site icon Tamil News

வீட்டு பணிப்பெண்ணாக அரபு நாட்டிற்கு சென்ற பெண் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடு!

அரபு நாட்டிற்கு பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவராவார். அவரது கணவர் அளித்த முறைப்பாட்டிற்கு அமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.

பச்சிலைப்பள்ளி பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 39 வயதுடைய கோமதி பஞ்சலிங்கம் என்பவரே அரபு நாட்டிற்கு பணிக்காக சென்றிருந்த நிலையில், காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரபு நாட்டிற்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற அவர், இரண்டு மாதங்களாக பணம் அனுப்பியுள்ளார். இதன் பின்னரே அவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் தொலைப்பேசியில் பேசிய அவர், அங்கு தனது முதலாளியுடன் சண்டை ஏற்பட்டதாகவும், இதனால் பணம், கடவுச்சீட்டு என்பவற்றை பறித்து வைத்துள்ளதாகவும் தெரிவித்ததாக கணவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இது குறித்து வீட்டு உரிமையாளரிடம் கேட்கையில், அவர் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்ததாக கணவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்ய சென்றிருந்த போது, இவ்வாறு வீட்டுப் பணிக்காக செல்வோர் 2 வருடங்களைக் கடந்திருந்தால் மட்டுமே நாம் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் அவ்வாறு இல்லாத பட்சத்தில் பணிக்காக அனுப்பிய முகவர்களே அதற்கு பொறுப்பு எனத் தெரிவித்துள்ளதாகவும் குறித்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.

எனவே அரச நிறுவனங்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் நாட்டின் தலைவர் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு எனது மனைவியை மீட்டுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version