வாரத்திற்கு 4 நாட்கள் வேலை – மன அழுத்தத்தை குறைப்பதாக ஆய்வில் தகவல்

வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்வது மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதாக தெரியவந்தது.
அமெரிக்கா மற்றும் ஐர்லாந்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், சம்பளத்தை குறைக்காமல் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்யும் 141 நிறுவனங்களின் 3,000 ஊழியர்கள் பங்கேற்றனர்.
ஆய்வு முடிவுகள் ‘Nature Human Behaviour’ இதழில் வெளியிடப்பட்டன.
குறைந்த வேலை நேரம் மன அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தியது என தெரியவந்தது. இதனால், 90% நிறுவனங்கள் சோதனை முடிந்த பிறகும் இந்த முறைமையை தொடர முடிவு செய்துள்ளன.
ஜெர்மனியிலும் இதேபோன்ற ஆய்வு நடத்தப்பட்டது. 41 நிறுவனங்கள் பங்கேற்ற இந்த ஆய்வில், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் ஹார்மோன் அளவீடுகள் மூலம் உடல் நிலைகள் கண்காணிக்கப்பட்டன.
நான்கு நாள் வேலைக்குழுவில் மன அழுத்தம் குறைவாகவும், தூக்க நேரம் அதிகமாகவும் இருந்தது. மேலும், வேலை நேரம் குறைந்தபோதும் உற்பத்தித்திறன் பாதிக்கப்படவில்லை.
அறிக்கையின் அடிப்படையில், 73% நிறுவனங்கள் நான்கு நாள் வேலை வாரத்தை செயல்படுத்த திட்டமிட்டு உள்ளன, மேலும் 82% ஊழியர்கள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, வேலை வாரத்தை குறைப்பது ஒரு நல்லதொரு தொடக்கமாக இருந்தாலும், வேலைச்சுமை மற்றும் ஒழுங்கற்ற திட்ட மேலாண்மையே உண்மையான சோர்வுக்காரணம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.