Site icon Tamil News

பெப்ரவரியிலும் 32 சதவீதமாகத் தொடரும் உணவுப்பாதுகாப்பின்மை நிலை

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை கடந்த பெப்ரவரி மாதமும் 32 சதவீதமாகத் தொடர்வதாகச் சுட்டிக்காட்டியுள்ள உலக உணவுத்திட்டம், கடந்த மாதத்தில் மாத்திரம் அத்தியாவசிய உதவிகள் தேவைப்படும் 197,192 பேருக்கான உதவிகளை வழங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

உலக உணவுத்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள பெப்ரவரி மாதத்துக்கான அறிக்கையின் பிரகாரம் நாடளாவிய ரீதியில் அத்தியாவசியத்தேவையுடையோருக்கு 1,129,495 மெட்ரிக் தொன் உணவு பகிர்ந்தளிக்கப்பட்டிருப்பதுடன் 7 மில்லியன் டொலர் பெறுமதியான பணமும், காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு, விவசாய அமைப்பு என்பன இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து உணவுப்பாதுகாப்பு தொடர்பான கூட்டு மதிப்பாய்வு ஒன்றை முன்னெடுத்துள்ளன. இம்மதிப்பாய்வு நாட்டின் 25 மாவட்டங்களில் தெரிவுசெய்யப்பட்ட 15,000 குடும்பங்களை அடிப்படையாகவைத்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மேலும் கடந்த ஆண்டு உலக உணவுத்திட்டத்தினால் அவசர உதவி வழங்கல் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தற்போதுவரை மொத்தமாக 547,264 பேருக்கு நிதியுதவிகளும், 486,096 பேருக்கு உணவுசார் உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. இது நாடளாவிய ரீதியில் 1.4 மில்லியன் பேருக்கு அவசியமான உணவு அல்லது நிதிசார் உதவிகளை வழங்கவேண்டும் எ;னற உலக உணவுத்திட்டத்தின் இலக்கின் ஓரங்கமேயாகும்.

அதேபோன்று கடந்த பெப்ரவரி மாதம் உலக உணவுத்திட்டத்தினால் 7,593 பாடசாலைகளுக்கு அவசியமான அரிசி விநியோகிக்கப்பட்டதுடன் அதன்மூலம் 1,065,686 மாணவர்கள் பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version