ஜெர்மனியில் ATM பயனாளர்களுக்கு மர்ம நபரால் ஆபத்து – பொலிஸார் எச்சரிக்கை
ஜெர்மனியில் ATM பயன்படுத்தும் மக்களை ஏமாற்றி கொள்ளையிடும் சம்பவம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 வருடங்களாக பிரான்ஸில் இடம்பெற்று வந்த இந்த மோசடி தற்போது ஜெர்மனியிலும் ஆரம்பித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ATM இயந்திரங்களுக்கு அருகில் செயற்படும் இந்த கொள்ளையர்கள் ATM இயந்திரத்தில் உள்ளிடப்படும் PIN இலக்கத்தை இரகசியமாக பெற்று திருட்டு நடவடிக்கையில் ஈடுபடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவ்வாறான கொள்ளை தொடர்பில் , 42 மற்றும் 44 வயதுடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கும்பல்களுடன் இணைந்து செயற்படும் கொள்ளையர்கள் நாடு முழுவதும் இயங்குவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ATMக்கும் செல்லும் வயோதிப குடிமக்களையே அதிகளவில் குறி வைத்து பணத்தைக் கொள்ளையடிப்பதாக கூறப்படுகின்றது.
வயோதிபர்கள் ATM இல் தங்கள் PIN ஐ உள்ளிடுவதை அவர்கள் கவனிப்பதற்காக ஒரு முறையை வைத்திருப்பதாகவும் பின்னர் ஒரு உரையாடலால் ஈடுபட்டு அவர்களை திசைதிருப்பி அவர்களின் வங்கி மற்றும் கடன் அட்டைகளை திருடுவதாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் கணக்குகளில் உள்ள அனைத்து பணத்தையும் களவாடுகின்றனர்.
சந்தேக நபர்கள் மிகவும் தொழில்முறை ரீதியாக இருந்ததால், பாதிக்கப்பட்டவர்கள் பல வாரங்களுக்குப் பிறகுதான் தங்கள் பணம் காணாமல் போனதைக் கவனித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தங்கள் குற்றங்களைச் செய்ய பிரான்ஸிலிருந்து ஜெர்மனிக்கு சிறிது காலத்திற்கு மட்டுமே பயணம் செய்வதாகக் கூறப்படுகிறது
குறைந்தது 75 சம்பவங்களில் 200,000 யூரோக்களுக்கு மேல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.