Site icon Tamil News

சாதனை புரிய வயதில்லை – 95 வயதில் சாதனை படைத்த மூதாட்டி

போலந்தில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் திடல்தடப் போட்டியில் 90 முதல் 95 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் இந்தியாவை சேர்ந்த 95 வயது பகவானி தேவி மூன்று தங்கப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

60 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய மூன்று பிரிவுகளில் அவர் வெற்றிபெற்றார்.அவர் புதுடெல்லி திரும்பியபோது அவரை மேளதாளங்கள் முழங்க உறவினர்கள் வரவேற்றனர்.

இளையர்கள் கடுமையாக உழைத்து, வெற்றிக்காக பாடுபட வேண்டும் என்று பகவானி தேவி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குழந்தைகள் விளையாட்டில் ஈடுபடுவதற்கு பெற்றோர் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் சொந்த நாட்டுக்காக பதக்கம் வெல்வதற்கு ஏற்ற வகையில் அவர்களை தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பகவானி தேவிக்கு 12 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 30 வயதில் அவரின் கணவரும் மகனும் இறந்துவிட்டனர்.

தம் மகள் மற்றும் வயிற்றில் உள்ள குழந்தையின் நலன் கருதி பகவானி தேவி மறுதிருமணம் செய்துகொள்ளவில்லை.

நான்கு ஆண்டுகள் கழித்து அவருடைய எட்டு வயது மகளும் உயிரிழந்தார். இருப்பினும், மனந்தளராமல் வயல்வெளியில் வேலை செய்து தம் மகனை வளர்த்தார். இறுதியாக அவரது முயற்சிக்குப் பலன் கிட்டியது.

அவருடைய மகனுக்கு டெல்லி மாநகராட்சியில் வேலை கிடைத்தது. அவர்களின் குடும்ப பொருளாதார சூழ்நிலையும் மேம்பட்டது.

முதுமையிலும் திடல்தடப் போட்டிகளில் அசத்தும் பகவானி தேவி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஃபின்லாந்தில் நடைபெற்ற திடல்தடப் போட்டியில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version