எலான் மஸ்க்கும் அவரது நிறுவனமும் செழிக்க வேண்டும்: டிரம்பின் திடீர் மனமாற்றம்

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கும் அவரது நிறுவனங்களும் அமெரிக்காவில் செழித்து வளர வேண்டும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
அரசு உதவிகளை நிறுத்தப் போவதாகத் தொடக்கத்தில் அவர் எச்சரித்திருந்தாலும், அதை மறுத்து ஆதரவு தெரிவித்து முகநூலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.
முன்னதாக, அரசின் செலவுகளை குறைத்து திறனை மேம்படுத்த டிரம்ப் நிர்வாகத்தில் ஒரு சிறப்பு துறை அமைக்கப்பட்டது.
அதன் தலைவராக எலான் மஸ்க் நியமிக்கப்பட்டிருந்தார். ஆனால், டிரம்ப் அமைச்சரவையினருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக, மஸ்க் அந்த பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து அமெரிக்க செனட் சபையில் புதிய செலவு மற்றும் வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதை எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார், எனவே கோபமடைந்த டிரம்ப், அவரது நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அரசு ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களை திருப்பிக்கொள்ளப்போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால், பின்னர் வெளியிட்ட தனது அறிக்கையில், “எலான் மஸ்க்கும், நம் நாட்டில் உள்ள அனைத்து வணிகங்களும் முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
அவர்கள் சிறப்பாக செயல்படும்போது அமெரிக்காவும் சிறப்பாக செயல்படும். அது நமக்கெல்லாம் நன்மை தரும்,” எனத் தெரிவித்தார்.
அமெரிக்கா ஒவ்வொரு நாளும் சாதனைகளை படைத்து வருவதாகவும், அதனை தொடர்ந்து வைத்திருக்க தாம் விரும்புவதாகவும் டிரம்ப் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.