Site icon Tamil News

முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு இன்று செயற்திட்ட விளக்கம் அளிக்கிறது இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதியைத் தொடர்ந்து அரசாங்கமானது இன்றைய தினம் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவருக்கும் நிகழ்நிலை முறைமையின் ஊடாக தமது அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றிய செயற்திட்ட விளக்கத்தை (ப்ரசென்டேஷன்) அளிக்கவுள்ளது.

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை கடந்த 20 ஆம் திகதி அனுமதியளித்துள்ளது.

அதனையடுத்து இலங்கையின் கடன்வழங்குனர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய தினம் (30) நிகழ்நிலை முறைமையின் ஊடாக செயற்திட்ட விளக்கத்தை அளிக்கவிருப்பதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை நேரப்படி பி.ப 6 மணிக்கு (நியூயோர்க் – நண்பகல் 12.30 மணி, லண்டன் – பி.ப 1.30 மணி, பெய்ஜிங் – இரவு 8.30 மணி) இடம்பெறவுள்ள இந்நிகழ்நிலை சந்திப்புக்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர்.

இதன்போது கடந்த 20 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதியளிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டம் மற்றும் அதன் பிரதான இலக்குகள் குறித்தும், கடன்வழங்குனர்களுடனான பேச்சுவார்த்தைகளின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் முதலீட்டாளர்கள் மற்றும் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

Exit mobile version