Site icon Tamil News

நாட்டை மேம்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு புலம்பெயர்ந்தோர் மற்றும் இளம் சமூகத்தினருக்கு ஜனாதிபதி அழைப்பு

இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின்  ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.

மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை  கொண்டுச்  செல்லும் என எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கான  தொடர்ச்சியான  வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும்  இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.

காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று  100 வருடங்கள் பூர்த்தி ஆகின்ற 2048 ஆம்  ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறும் எனவும் அவை அனைத்தும்  பொருளாதார மறுசீரமைப்புக்கான  அர்பணிப்பிலேயே தங்கியுள்ளதெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி  அதற்காக நமது மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்திக்கொள்ள  வேண்டும் எனவும் தெரிவித்தார்.

நாம் பலமான ஜனநாயக கட்டமைப்பினையும் திறந்த பொருளாதாரத்தையும் கொண்டுள்ள சிறியதொரு நாடு என்ற வகையில் அரசியல் ஸ்திரத் தன்மையை பேணி வருகின்ற அதேநேரம்   எமது அயல்நாடும் நீண்ட கால உறவை பேணிவரும் நாடுமான இந்தியாவை  வலயத்தின்  பாதுகாவலனாக கருதுகிறோம் எனவும் சுட்டிக்காட்டினார்.

பழமையான பொருளாதார கொள்கைகளுடன்  புத்துயிர் பெற்றுவருகின்ற  ஆசிய வலயம் மற்றும் இந்தியாவின் அபிவிருத்திச் செயற்பாடுகளோடு  கைகோர்த்துக்கொண்டு  பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளில் இலங்கை முன்நின்று செயற்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள்  தெரிவித்தார்.

இந்தியாவுடன் காணப்படுகின்ற  சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை  பொருளாதார ஒத்துழைப்பு மற்றும்  தொழில்நுட்ப ஒப்பந்தமாக மாற்றியமைத்துக்கொள்வது சிறந்தது என்றும் ஆசியாவின மீக நீண்ட  பொருளாதார கூட்டிணைவுடன்  பொருளாதார ஒப்பந்தங்களை  கைசாத்திடுவதால்  உலகின் மிகப்பெரிய  பொருளாதார குழுவுடன்  முன்னோக்கிச்  செல்வதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது, அடுத்த 25 வருடங்களுக்குள்  செழிப்பான மற்றும் வலுவான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சமூக  பொருளாதார   மற்றும் அரசியல்   மறுசீரமைப்புக்கள்  தொடர்பில் ஜனாதிபதியவர்கள் விரிவான கருத்துக்களை  தெரிவித்தோடு, இலங்கையின் இன வேறுபாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்து மற்றும்  வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும்  உள்ளக  பேச்சுவார்த்தைகள், நெருக்கமான புரிந்துணர்வு மற்றும் இனக் குழுக்கள் இடையிலான  பல்வகைத் தன்மையை  புரிந்துகொள்வதன் மூலம்   தேசிய ஒற்றுமையை  மேம்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார்.

அத்தோடு,   செல்வதந்த நாடுகளின்   மோதல் இலங்கைக்கு திறக்கப்படவுள்ள இந்திய  மற்றும் ஆபிரிக்க வலயத்தின்  பொருளாதார சந்தை வாய்ப்புக்களுக்கு தடையாக அமையாது என்றும்  ஜனாதிபதியவர்கள் வலியுறுத்தினார்.

Exit mobile version