Site icon Tamil News

தேசிய பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக தலையிடுகிறோம் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

இதுவரை வழங்கப்பட்ட பரிந்துரைகளுடன் மட்டுப்படுத்தாமல் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாகத் தலையிடப்போவதாகத் தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

குறித்த மேற்பார்வைக் குழுவின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக கடந்த 21ஆம் திகதி கூடியபோதே அதன் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்தக் குழுவானது துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் மிகவும் முக்கியமான பணியாற்றும் குழு எனச் சுட்டிக்காட்டிய அதன் தலைவர், இதில் அடங்கும் பல்வேறு துறைகள் குறித்து எதிர்வரும் காலத்தில் கவனம் செலுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கேந்திர முக்கியத்துவம் நிறைந்ததாக அமைந்துள்ள இலங்கைக்கு கடந்த காலத்திலிருந்து பல்வேறு ஆக்கிரமிப்புக்கள் மற்றும் எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டதாகவும், இது புதிய தோற்றத்தில் பௌதீக ஆக்கிரமிப்புக்களுக்குப் பதிலாக வெளிநாட்டு உடன்படிக்கைகள் மூலம் மேற்கொள்ளப்படலாம் என்றும் வீரசேகர தெரிவித்தார்.

இவ்வாறான ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய்ந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பதைக் கண்டறிவது இந்தக் குழுவின் பொறுப்பு என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

உத்தேச மத்திய வங்கி சட்டமூலம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவிருப்பதாக குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பயங்கரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த நாட்டில் மத தீவிரவாதம் செயற்படும் அபாயம் காணப்படுவதாகவும் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மதம் மற்றும் மொழியை மட்டும் போதிக்கும் பதிவு செய்யப்படாத மத்ரஸா பாடசாலைகள் குறித்தும், வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்து தீவிரவாத கருத்துக்கள் மற்றும் விரிவுரைகளை வழங்குபவர்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version