Site icon Tamil News

டி.எஸ்சின் தத்துவத்தை செயற்படுத்திய சிங்கப்பூர் அபிவிருத்தியடைந்த நாடாக மாறியது என ஜனாதிபதி தெரிவிப்பு Mar 23, 2023 07:26 am

மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் தத்துவத்தை நாம் ஒதுக்கினாலும்  பிரதமர் லீ குவான் யூ அந்த தொலைநோக்குப் பார்வையைப் பின்பற்றி சிங்கப்பூரை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றியுள்ளதாக  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  தெரிவித்தார்.

எமது  நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்று கனவு கண்ட போதும் கடந்த 75 வருடங்களில் சில அரசியல் இயக்கங்களின் தீர்மானங்களினால் இலங்கைக்கு ஏற்பட்ட அழிவுகள் எண்ணிலடங்காது எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

சுதந்திரச் சதுக்கத்தில்  நேற்று (22) நடைபெற்ற மறைந்த பிரதமர் தேசபிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 71வது நினைவுதின நிகழ்வில் கலந்து கொண்ட போதே  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் இதனைக் குறிப்பிட்டார்.

வலுவான மற்றும்  சக்திவாய்ந்த இலங்கையொன்றை  கட்டியெழுப்ப சேனநாயக்கவின் பாரம்பரியத்தை  முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

அரச துறை  வியாபாரம் மேற்கொண்டதால், கடந்த தசாப்தங்களில் மகாவலி போன்ற சுமார் 100 திட்டங்களை நிர்மாணிப்பதற்கான பணம்  வீணடிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் அரச துறையானது வர்த்தகத்தில் இருந்து விலகி தனியார் துறைக்கு திறந்துவிடப்பட்டு சுதந்திர  மற்றும் உற்பத்திப் பொருளாதாரத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சுதந்திரப் பொருளாதாரத்தை உருவாக்குவதே  எஸ்.சேனாநாயக்கவின் தத்துவமாக இருந்ததை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, தனியார் துறையினரால் வியாபாரம் செய்யப்பட வேண்டும் என்றும் அவர்களிடமிருந்து பெறப்படும் வரி வருமானத்தில் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

Exit mobile version