Site icon Tamil News

கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை முன்னேற்றத்தைக் காண்பிப்பது அவசியம் என கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா வலியுறுத்தல்

உறுதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தை உரியகாலத்தில் அமுல்படுத்துவதும் இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு மிகவும் அவசியமாகும் என்று  சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய இருதரப்புக் கடன்வழங்குனர்களிடமிருந்து நிதியியல் உத்தரவாதம் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது கடன் ஸ்திரத்தன்மையை மீளுறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கமும் கடன்வழங்குனர்களும் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தின்கீழ் எதிர்வரும் 48 மாதகாலத்தில் இலங்கைக்கு 2.286 பில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை நேற்று முன்தினம் திங்கட்கிழமை அனுமதியளித்துள்ளது. அதனையடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உயர் பணவீக்கம், வெளிநாட்டுக்கையிருப்பு வீழ்ச்சி, நிலையற்ற பொதுக்கடன்கள், நிதியியல்துறைசார் குறைபாடுகள் போன்ற பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை பாரிய பொருளாதார மற்றும் சமூக ரீதியான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. முக்கிய நிறுவனங்கள் மற்றும் நிர்வாகக்கட்டமைப்புக்களில் ஆழமான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளன.

உறுதியான மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதும், நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்தை உரியகாலத்தில் அமுல்படுத்துவதும் இலங்கை தற்போதைய நெருக்கடியிலிருந்து மீண்டெழுவதற்கு மிகவும் அவசியமாகும் எனவும் கூறியுள்ளார்.

Exit mobile version