Site icon Tamil News

ஊட்டச்சத்து மாத்திரை உட்கொண்ட மாணவிகள் மயக்கம்

நீலகிரி மாவட்டம் காந்தல் பகுதியில் உதகை நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

இங்கு 249 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தமிழக அரசு சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்படும்.

இது ஒரு மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர் மூலம் வழங்கப்படும். இந்நிலையில் 8-ம் வகுப்பு பயின்று வரும் 4 மாணவிகளிடையே யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி நிலவியதாக தெரிகிறது. இதனால்

ஒவ்வொரு மாணவியும்  மாத்திரைகளை அதிகளவிற்கு உட்கொண்டுள்ளனர். ஒரு கட்டத்தில்  அம்மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவிகள் வகுப்பறையிலேயே மயக்கமடைந்துள்ளனர்.

இதனையடுத்து இதர மாணவிகள் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து உடனடியாக அம்மாணவிகளை மீட்டு உதகை அரசு மருததுவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்துள்ளனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 மாணவிகள் 30 ற்கும் மேற்பட்ட மாத்திரைகளை உட்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் நால்வரின் உடல்நிலையும் சீராகி வருவதாக உதகை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மாத்திரை சாப்பிட்டு 12 முதல் 14 மணி நேரத்திற்கு பின்னர் தான் அதன் வீரியம் தெரியவரும் என உதகை மருத்துவர்கள் கூறிய நிலையில் தற்போது அம்மாணவிகள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இங்கு மாணவிகள் உடல்நலம் குறுத்து தொடர்ந்து  கண்காணிப்பட்டு வருகிறது. இந்நிலையில் உதகை சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி,

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரை வாரம் ஒரு முறை மதியம் சாப்பிட்ட பின் அதற்காக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிலையில்

இவ்வளவு மாத்திரை மொத்தமாக மாணவிகளுக்கு எவ்வாறு கிடைத்தது என்று தெரியவில்லை எனவும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உதகை மேற்கு காவல் ஆய்வாளர் மீனா பிரியா தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Exit mobile version