தேர்தலை நடத்தாமல் ஆட்சியில் நீடிக்க மக்கள் வாக்கெடுப்பை நடத்த திட்டமிடும் ரணில்!
தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து ஆட்சியில் இருக்க மக்கள் வாக்கெடுப்பு ஒன்றை நடத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார் எனவும் இது முறையற்ற செயல் எனவும் சுதந்திர மக்கள் சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டலஸ் அழகபெரும தெரிவித்தார்.
நாவல பகுதியில் நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “பொருளாதார ரீதியில் மக்களை நெருக்கடிக்குள்ளாக்கிஇ தேர்தல் ஒன்று அவசியமில்லை என்று மக்களே குறிப்பிடும் நிலையை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த ஜனாதிபதி உத்தேசித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவின் காலத்தில் நடத்தப்பட்ட மக்கள் வாக்கெடுப்பு தொடர்பில் இன்றளவும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனம் காணப்படுகிறது.
தேர்தல் வேண்டுமா, இல்லையா என்பதற்காக மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது முறையற்றது. ஜனாதிபதியின் முறையற்ற செயலுக்கு பொதுஜன பெரமுன பங்காளியாகுமா என்பதை மக்களுக்கு அறிவிக்க வேண்டும்” என்றார்.