உலக நாடுகளை இரட்டை நிலைப்பாட்டை கைவிட்டு இஸ்ரேலைத் தண்டிக்குமாறு கத்தார் பிரதமர் வலியுறுத்தல்

அனைத்துலகச் சமூகம் தனது இரட்டை நிலைப்பாட்டைக் கைவிட்டு இஸ்ரேலைப் பொறுப்பேற்கக்கோரி நெருக்குதல் தர வேண்டும் என்று கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்தானி வலியுறுத்தியுள்ளார்.
டோஹாவில் உள்ள ஹமாஸ் தலைவர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலுக்குப் பதிலளிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 14) அவசரமாகக் கூட்டப்பட்ட உச்சநிலைக்கூட்டத்தின் முதல் நாளின்போது ஷேக் முகமது தெரிவித்துள்ளார்.
அமெரிக்க நட்பு நாடு ஒன்று, மற்றொரு அமெரிக்க நட்பு நாட்டின் மீது நடத்திய இந்தத் தாக்குதல் பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அதிபர் டோனால்ட் டிரம்ப், தாக்குதலைக் கண்டித்தபோதிலும் இஸ்ரேல் தரப்புக்குத் தொடர்ந்து ஆதரவைத் தெரிவிக்கும் விதமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை அங்கு அனுப்பினார்.
திங்கட்கிழமை நடைபெற்ற அரபு மற்றும் இஸ்லாமியத் தலைவர்களின் அவசரக் கூட்டம், வளைகுடா நாடுகளிடையே ஒற்றுமையைக் காட்டும் விதமாக அமையும். காஸாவில் நடந்து வரும் போர் மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று இஸ்ரேல் மீது ஏற்கெனவே அதிகரித்து வரும் அழுத்தத்தை இது மேலும் கூட்டும்.தயார்நிலைக் கூட்டத்தில் பேசிய திரு ஷேக் முகமது, “அனைத்துலகச் சமூகம் இரட்டை நிலைப்பாட்டைக் கைவிட்டு, இஸ்ரேல் செய்த அனைத்துக் குற்றங்களுக்கும் தண்டனை வழங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கூறினார்.
இஸ்ரேல் காஸாவில் செய்துவரும் அழிப்பு முயற்சி வெற்றிபெறாது என்றும் அவர் சூளுரைத்தார்.
“அனைத்துலகச் சமூகத்தின் மெளனமும் பொறுப்பேற்க வைப்பதற்கான திராணியற்ற நிலையும் இயலாமையும்தான் இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கின்றன,“ என்றும் அவர் கூறினார்.
திங்கட்கிழமை உச்சநிலைக்கூட்டத்தில் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன், ஈராக் பிரதமர் முகமது ஷியா அல்-சுடானி, துருக்கி அதிபர் ரிசெப் தையிப் எர்டுவான் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது.பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் ஞாயிற்றுக்கிழமை டோஹா வந்தடைந்தார். சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை.