அரசாங்கத்தின் பொறுப்பை தேசிய மக்கள் சக்தி ஏற்க தயாராக உள்ளது – அனுரகுமார
நாட்டை மேலும் சீரழிக்க இடமளிக்காமல் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் NPP ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்க தமது கட்சி தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) சூறையாடப்படுவதை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இன்று கொழும்பில் NPP யினால் எதிர்ப்பு ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் நிதியமைச்சு உள்ளிட்ட 18 இடங்களுக்கு அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தும் போராட்டக்காரர்களின் நடமாட்டத்தை தடை செய்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்தவகையில், தேசிய மக்கள் சக்தி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தமது கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியதுடன், அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உட்பட தேசிய மக்கள் முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
“எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட நிதியை அரசாங்கம் கொள்ளையடிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா? அதை நாம் அனுமதிக்கக் கூடாது” என்று NPP தலைவர் கூறினார்.