உலகம் முழுவதும் கடும் வெப்பம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பலி
வட அமெரிக்கா, தெற்கு மற்றும் கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஐரோப்பா உட்பட உலகின் பல பகுதிகளை பாதித்துள்ள அதீத வெப்பநிலை காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஏராளமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளதாகவும், இது வரப்போகும் கடுமையான வானிலைக்கான அறிகுறி எனவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு மார்ச் 1ம் திகதி முதல் ஜூன் 18ம் திகதி வரை இந்தியாவில் கடும் வெப்பம் காரணமாக 110 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40,000க்கும் மேற்பட்டோர் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், கிரீஸில் கடந்த சில வாரங்களில் கடும் வெப்பம் காரணமாக ஊடகவியலாளர் ஒருவர் உட்பட 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மேலும், 1,081 ஹஜ் யாத்திரிகர்கள் கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் 658 பேர் எகிப்தியர்கள் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹஜ் யாத்திரையின் போது மெக்காவில் 52 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளதாகவும், அதிக வெப்பநிலை காரணமாக இதயம் மற்றும் நாட்பட்ட நோய்கள் அதிகரித்ததன் காரணமாக ஒரே இரவில் 109 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது, 100 மில்லியன் அமெரிக்கர்கள் தீவிர வெப்பநிலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு எச்சரித்துள்ளதாகவும், உலகெங்கிலும் உள்ள தீவிர வெப்பநிலை காலநிலை மாற்றத்தின் விளைவாக இருப்பதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.