இறக்குமதி செய்யப்படும் 13 வகை மருந்துகள் தரமற்றவை
முறையான தரமின்மை காரணமாக, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட மேலும் 13 வகை மருந்துகள், கடந்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான வைத்தியர்களின் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் 8 மருந்து வகைகளும் இந்த வாரம் ஐந்து வகை மருந்துகளும் உள்ளடங்கலாக, பதின்மூன்று வகை மருந்துகள் அகற்றப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் டொக்டர் ஷமல் சஞ்சீவ தெரிவித்தார்.
கடந்த வாரம் பாவனையிலிருந்து விலக்கப்பட்ட 8 வகை மருந்துப் பொருட்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த மருந்து வகைகளைக் கொண்டு வந்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு, முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் மாத்திரம் சுமார் முந்நூறு மருந்து வகைகள் பாவனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் நிமோனியா, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்கான மருந்துகள் அடங்குவதாகவும் வைத்தியர் தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், ஒவ்வொரு வாரமும் மருந்து வகைகள் அகற்றப்படுவதாகவும் ஆனால் இறக்குமதியில் ஈடுபட்ட அதிகாரிகள் தொடர்பில் சுகாதார அமைச்சினால் மருந்துகளை இனங்காண சரியான வேலைத்திட்டத்தை ஏற்படுத்த முடியவில்லை எனவும் வைத்தியர் ஷமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் தரம் குறைந்த மருந்துகளை அகற்றுவதனால், திறைசேரி பாதிக்கப்படுவதாகவும் எனவும் தற்போதைய சுகாதார அமைச்சர் இவ்விடயங்கள் தொடர்பில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அனைத்து அரச நிறுவனங்களும் போதைப்பொருள் இறக்குமதி பொறிமுறையில் தலையிட்டு அடுத்த வருடம் இந்நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், இல்லையேல் வெற்றிகரமான முறைமை மாற்றத்தை நம்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.