மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் – இந்திய பிரதமர் மோடி கோரிக்கை

புதுடெல்லியில் நடைபெற்ற 98வது அகில பாரதிய மராத்தி இலக்கிய மாநாட்டை தொடங்கி வைத்து அதில் பேசிய பிரதமர் மோடி மொழி குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் “மொழி அடிப்படையில் பிளவுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போது, இந்தியாவின் பன்முக மொழி பாரம்பரியம் அதற்கு பொருத்தமான பதிலடி கொடுக்கிறது.
மராத்தி உட்பட அனைத்து முக்கிய மொழிகளிலும் கல்வியை ஊக்குவித்து வருகிறது. “இந்திய மொழிகளுக்கிடையே ஒருபோதும் பகைமை இருந்ததில்லை. ஒவ்வொரு மொழியும் மற்றொரு மொழியை வளப்படுத்தியிருக்கின்றது.
மத்திய அரசை பொறுத்தவரையில் அனைத்து மொழிகளையும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே கருதுகிறது. எனவே, அனைத்து மொழிகளையும் அரவணைத்து வளப்படுத்துவது நமது சமூகப் பொறுப்பு.
இப்போது மராத்தி மொழியிலேயே பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்வியை கற்க முடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நமது இலக்கியங்கள் நமது சமுதாயத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி போன்ற ஒன்று” எனவும் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர் இந்தியா குறித்தும் பேசினார். இது குறித்து பேசிய அவர் “இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக வளர்ந்து வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்த வேகத்தை விரைவுபடுத்த, நமக்கு உலகத்தரம் வாய்ந்த தலைவர்கள் தேவை.
இன்று, உலகளாவிய சிக்கல்களுக்கு தீர்வு காணக்கூடிய மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்கும் அதே வேளையில் தேசிய நலனை முன்னணியில் வைத்திருக்கக்கூடிய அனைத்து துறைகளிலும் துடிப்பான தலைவர்கள் இந்தியாவுக்குத் தேவை” எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஏற்கனவே, மும்மொழி கொள்கை விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வி துறை அமைச்சர் கல்வியை அரசியல் ஆக்காதீங்க..மும்மொழியை ஏத்துக்கோங்க என்று கடிதம் எழுதியிருந்தார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்று பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.