நடிகர் அல்லு அர்ஜூனுக்கு பிணை!
கைது செய்யப்பட்ட இந்தியத் திரைப்பட நடிகரான அல்லு அர்ஜூன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
திரையரங்கம் ஒன்றில் பெண் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ஒன்றைப் பார்க்க சென்ற பெண் ஒருவர் ஹைதராபாத்தில் உயிரிழந்தார்.
39 வயதான குறித்த பெண் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்ததுடன் அவரது மகன் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அன்றைய தினம் நடிகர் அல்லு அர்ஜூனும் குறித்த திரையரங்குக்குச் சென்ற நிலையிலேயே இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
இந்தநிலையில் நடிகர் அல்லு அர்ஜூன், அவரது பாதுகாப்பு குழுவினர் மற்றும் சம்பவம் இடம்பெற்ற திரையரங்கின் நிர்வாக பணியாளர்கள் உள்ளிட்டோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து குறித்த தரப்பினர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பின்னர் மேல் நீதிமன்றினால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதேநேரம், திரையரங்குக்கு வருவது தொடர்பில் அவர், தங்களுக்கு அறிவிக்கவில்லை என திரையரங்கத்தின் நிர்வாகத்தினர் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.