டெங்கு தொற்றால் கேரளாவி்ல் இதுவரை 15 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இவ்வாண்டில் மட்டும் இதுவரை 15 பேர் டெங்கிக் காய்ச்சலால் இறந்துவிட்டனர்.நடப்பாண்டில் அங்கு இதுவரை 2,450 பேருக்கு டெங்கித் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் டெங்கி தொற்ற அதிக வாய்ப்புள்ள மாநிலங்களில் ஒன்றாக கேரளா இருப்பதாகச் சுகாதாரத் துறை மதிப்பிட்டுள்ளது. அதிகரித்துவரும் வெப்பநிலை, டெங்கித் தொற்றை ஏற்படுத்தும் ஏடிஸ் கொசுக்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்த சூழலை ஏற்படுத்தித் தருவதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், கோடை மழையைத் தொடர்ந்து கேரளாவில் பரவிவரும் டெங்கிக் காய்ச்சல் கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. பெரும்பாலோருக்கு இலேசான அறிகுறிகளே இருந்தாலும், மீண்டும் டெங்கி தொற்றும்போது உடல்நிலை மிகவும் மோசமாகலாம்.
சென்ற ஆண்டு அங்கு 20,568 பேருக்கு டெங்கித் தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் 53,688 பேரை டெங்கி தொற்றியிருக்கும் எனச் சந்தேகிக்கப்பட்டது. இலேசான அறிகுறிகளே தோன்றுவதால் டெங்கி பாதிப்பு பெரும்பாலும் கண்டுபிடிக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.