டிரம்ப் கொலை முயற்சி தொடர்பாக ஆறு அதிகாரிகளை இடைநீக்கம் செய்த ரகசிய சேவை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்மீது 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் அமெரிக்க ரகசியச் சேவைப் பிரிவி, ஆறு அதிகாரிகளைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. அவர்கள் அதிபரின் பிரசாரக் களத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த அதிகாரிகள் 10லிருந்து 42 நாள்களுக்குச் சம்பளம் இல்லாமல் இடைநீக்கம் செய்யப்படுவதாகத் துப்பாக்கிச்சூடுச் சம்பவம் நிகழ்ந்து ஓராண்டாவதற்கு ஒரு நாள்முன் ரகசியச் சேவைப் பிரிவு அறிக்கை வெளியிட்டது.
இடைநீக்கம் செய்யப்படும் அதிகாரிகள் சம்பவத்தை அடுத்து விசாரணை முடியும்வரை கட்டுப்படுத்தப்பட்ட பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.
2024, ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியாவில் நடைபெற்ற பிரசாரத்தின்போது 20 வயது நபர் டிரம்ப்பை நோக்கி பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தியதைத் தொடர்ந்து ரகசியச் சேவைப் பிரிவு கடும் விமர்சனத்துக்குள்ளானது.
1981ஆம் ஆண்டுக்குப் பின் முன்னாள் அல்லது இன்னாள் அதிபர்மீது அத்தகைய துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது அதுவே முதல்முறை. அதில் தோட்டா ஒன்று திரு டிரம்ப்பின் காதை உரசி சென்றது. ரகசியச் சேவையில் மாற்றங்கள் செய்யப்படும்படி உடனடி வேண்டுகோள் விடுக்கப்பட்டதோடு அதன் செயல்பாட்டுத் திறன் குறித்தும் கேள்வி எழுந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபுளோரிடாவில் உள்ள கோல்ஃப் திடலில் மீண்டும் டிரம்ப் குறிவைக்கப்பட்டார். திடலில் மறைந்திருந்த சந்தேக நபரை அதிகாரிகள் சுட்டனர்.
இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.