சீனாவில் வளர்ப்பு பூனையால் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் வளர்ப்புப் பூனையின் செயலினால் பெண் ஒருவர் தனது வேலையை இழந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சீனாவின் சோங்கிங் மாகாணத்தைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் அவர் பணிப்புரியும் நிறுவனத்திலிருந்து தனது வேலையை இராஜினாமா செய்வதாக தனது மடிக்கணினியில் கடிதம் ஒன்று தட்டச்சு செய்து வைத்துள்ளார்.
ஆனால், வேலையை இழந்துவிட்டால் தான் வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகளை எப்படி கவனித்து கொள்வது என்ற யோசனையில் அதனை அனுப்ப வேண்டாம் என்று முடிவு செய்துள்ளார்.
அப்போது, திடீரென அவரது வளர்ப்புப் பூனைகளில் ஒன்று அந்த மடிக்கணினியின் மீது குதித்துள்ளது. அதில், அந்த பூனையின் கால் பட்டதில் அந்த மடிக்கணினியின் பட்டன்கள் அழுத்தப்பட்டு அந்த கடிதம் அப்பெண்ணின் நிறுவனத் தலைவருக்கு சென்றுள்ளது.
அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் அவரது நிறுவனத்தை அழைத்து நடந்தவற்றை கூறியுள்ளார்.
ஆனால், அவரது விளக்கங்களை ஏற்றுக்கொள்ளாத நிறுவனம் அவரை வேலையை விட்டு நீக்கியுள்ளது.
இதனால், வேலையை இழந்த அந்த பெண்ணுக்கு வருட முடிவில் கிடைக்கும் ஊதிய வெகுமதியும் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.