எனது போராட்டம் முடியவில்லை! அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கு பின் கமலா
ஜனாதிபதி தேர்தல் முடிந்தாலும் எனது போராட்டம் முடியவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதியாக செயற்பட்ட கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
ஹோவர்ட் (Howard) பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நிறைவுக்கு வந்தாலும் தமது போராட்டம் முடிவுறவில்லை என்று ஹாரிஸ் அவரது ஆதரவாளர்களிடம் கூறினார்.
அவரின் ஆதரவாளர்கள் பலர் கண்ணீருடன் காணப்பட்டனர். பெண்களின் உரிமை, துப்பாக்கி வன்முறைக்கு எதிரான போராட்டம், கண்ணியம் ஆகியவற்றுக்குத் தொடர்ந்து போராடப்போவதாக அவர் உறுதியளித்தார்.
அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்ப்பை அழைத்து வாழ்த்துத் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.
இருவருக்கும் இடையே அமைதியான முறையில் அதிகாரப் பரிமாற்றம் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஹாரிஸின் ஆதரவாளர் கூட்டத்தில் ஆளுநர் டிம் வால்ஸும் (Tim Walz) இருந்தார்.
“போராட்டம் நீண்ட காலம் எடுக்கலாம். நமக்கு வெற்றி கிடைக்காது என்று அதற்கு அர்த்தமல்ல” என ஆதரவாளர்களிடம் கூறிய ஹாரிஸ், குறிப்பாக இளையர்கள் மனம் தளரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.