Site icon Tamil News

கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற வேண்டும் – ராமதாஸ்!

மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் கச்சத்தீவில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற இந்தியா ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்தியாவால் கொடையாக வழங்கப்பட்ட கச்சத்தீவில் மிகப்பெரிய புத்தர் சிலையை சிங்களக் கடற்படை அமைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இந்த நடவடிக்கைக்கு தமிழ்நாடு மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். சிங்கள அரசின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது

கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் மட்டுமே உள்ளது. அங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் ஈழத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத் தமிழர்கள் பங்கேற்கின்றனர். அத்திருவிழா மத நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழ்கிறது.

புத்தர் சிலை அமைக்கப்பட்டிருப்பது கச்சத்தீவை சிங்களமயமாக்கும் செயலாகும். புத்தர் கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்டால் அது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

இது இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும் எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version