Site icon Tamil News

நல்லூர் ஆலய சூழலில் இளையோர் குத்தாட்டம்

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் ஆலய சூழலில் துள்ளல் இசை பாடல்கள் ஒலிக்க இளையோர் குத்தாட்டம் போடுவது தொடர்பில் யாழ் . மாநகர சபைக்கு பல தரப்பினர் பல்வேறு தடவைகள் அறிவித்தும், எவ்விதமான நடவடிக்கைகளையும் மாநகர சபை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நல்லூர் திருவிழா காலங்களில் ஆலய சூழலில் மாநகர சபையினால் கடைகள் குத்தகைக்கு வழங்கப்படும் போது, “பக்தி கீதங்கள் மட்டுமே ஒலிபரப்பு செய்யமுடியும்” எனும் நிபந்தனையுடனையே கடைகள் வழங்கப்படும்.

கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்கள் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், மாநகர சபையினால் எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்படும், அதனையும் மீறினால் ஒலிபரப்பு சாதனங்களை பறிமுதல் செய்து விடுவார்கள்.

ஆனால் இம்முறை மாநகர சபையினர் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையிலும் குறித்த ஒரு கடைக்கு எதிராக மாத்திரம் நடவடிக்கை எடுக்காது இருந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக கடைக்கான இடத்தினை மாநகர சபையிடம் குத்தகைக்கு பெற்றுக்கொண்ட நபர் ஒருவர் திருவிழா காலங்களில் இரவு வேளைகளில் கடையில் பெரிய திரையில் (8 X 10 LCD) திரையில் துள்ளல் இசை பாடல்களை ஒளி ஒலிபரப்பு செய்வதனால் , அவ்விடத்தில் கூடும் இளையோர் அதற்கு குத்தாட்டம் ஆடி , அவ்வழியாக செல்லும் ஏனையோருக்கும் இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டு வருகின்றனர்.

தியாக தீபத்தின் நினைவிடம் மற்றும் ஆலய சூழலில் களியாட்ட நிகழ்வுகள் போன்று இவ்வாறான செயற்பாடு நடைபெறுவது தொடர்பில் மாநகர சபையினருக்கு பல தடவைகள் முறைப்பாடுகள் செய்த போதிலும் மாநகர சபையினர் எவ்விதமான நடவடிக்கையும் குறித்த நபர்கள் மீது எடுக்கவில்லை.

நல்லூர் ஆலய பூங்காவன உற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலையும் நாளைய தினம் புதன்கிழமை வைரவர் சாந்தி உற்சவமும் நடைபெறவுள்ள நிலையில் , பெருமளவான மக்கள் ஆலயத்திற்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதனால் , பின் வீதியில் துள்ளல் இசை பாடல்களை போடும் குறித்த நபர்களுக்கு எதிராக மாநகர சபையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுள்ளனர்.

Exit mobile version