Site icon Tamil News

BJP ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லீம் சமூகத்தை குறிவைக்கும் NIA – கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு

மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் NIA அதிகாரிகள் முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்- பாராளுமன்ற தேர்தல் வரும் போதெல்லாம் இத்தகைய நெருக்கடிகளை இஸ்லாமிய மக்கள் சந்திக்க நேர்கிறது- கோவை மாவட்ட அனைத்து ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு.

கோவை மாவட்ட அனைத்து ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர்,கோவையில் கடந்த 16ம் திகதி 22 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி சிறுபான்மை சமுகத்தின் மீது அவதூறு கற்பிக்கும் வகையில் அரபி பயிலும் வகுப்பில் தீவிரவாத பயிற்சி நடைபெறுவதாக ஆதார மற்ற குற்றச்சாட்டை வெளியிட்டனர். இந்த செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது என்றார்.

மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சிறுபான்மை சமூகத்தை குறிப்பாக முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து பல்வேறு அடக்குமுறைகள், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர் என குறிப்பிட்ட அவர்கோவையில் உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு நிகழ்வையொட்டி சோதனை என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து என்.ஐ.ஏ அமைப்பானது சோதனைகள் என்ற பெயரில் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது என்றார்.

கடந்த 26ம் தேதி கோவையில் 22 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர், முபீன் படித்த பாடசாலையில் படித்தவர்கள் அவருடன் படித்த மாணவர்களை குற்றவாளிகள் போல பாவித்து அனைவரது வீடுகளில் அத்துமீறி சோதனைகள் செய்வதும், அவர்களின் வீடுகளில் உள்ளவர்களை அதிகாலை 5 மணிக்கு வந்து நெருக்கடிகள் கொடுப்பதும், விசாரணை என்ற பெயரில் அழைக்கழிக்கப்படுவதும் என பெரும் மனஉலைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றார்.

மேலும் கோவை கார் வெடிப்பு நிகழ்விற்கு பின்புலமாக இருப்பது யார் என்பதில் ஒரு பெரும் சந்தேகத்திற்குரியதாக உள்ளன நிலையில், தன் தவறை மறைக்கவும், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மதப்பதட்டத்தை ஏற்படுத்தியும் குளிர்காய நினைக்கும் அரசியல் தரகர்களின் சூழ்ச்சியாகவே இந்த சோதனையும் உள்ளது என கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு சந்தேகம் எழுப்புகிறது எனவும் கூறினார்.

கார் வெடிப்பு நிகழ்வில் இறந்த ஜமேஷா முபீனுடன் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் ஏற்கனவே என்ஐஏ வின் கண்காணிப்பில் இருப்பவர்கள் அப்படியிருந்தும், இத்தகைய நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. எனில் என்.ஐ.ஏ. சரியாக கண்காணிக்க வில்லையா? அல்லது அவர்கள் உறுதுணையுடன் இது நடந்ததா? என்ற கேள்வி எழுகிறது என்றார்.

Exit mobile version