Tamil News

நான் மதுக் குடிச்சு 100 நாளாச்சு… தனக்குத் தானே பேனர் வைத்த தள்ளுவண்டி வியாபாரி!

மதுப்பிரியர்களிடம் குடிச்சுக் குடிச்சு உடம்பக் கெடுத்துக்காதீங்க சாமி” என்று அட்வைஸ் செய்தால் கெட்ட கோபம் வரும். அந்தளவுக்கு அவர்கள் மதுவை கொண்டாடு வார்கள். ஆனால், அப்படியொரு மதுப்பிரியர் மனம் திரும்பி தொடர்ந்து 100 நாட்கள் குடிக்காமல் இருந்திருக்கிறார். இது அவருக்கே ஆச்சரியமாக இருந்திருக்கும் போலிருக்கிறது. அந்த ஆச்சரியத்தை தனக்குத் தானே பேனர் வைத்துக் கொண்டாடி இருக்கிறார்.

பூந்தமல்லியைச் சேர்ந்த சிவகுமார். 42 வயதுக்காரரான இவர் பூந்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே தள்ளுவண்டியில் கற்றாழை ஜூஸ் வியாபாரம் செய்கிறார்.‌ மதுப்பிரியரான இவரும், இவரது நண்பரும் தினமும் வியாபாரத்தை முடித்துவிட்டு மது அருந்துவது வழக்கம். நாளடைவில் இந்தப் பழக்கம் தீவிரமாகி இருவரும் குடிக்கு அடிமையானதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில், யாரும் சொல்லாமலேயே இதை உணர்ந்து கொண்ட இவர்கள் இருவரும் மதுக் குடிப்பதை நிறுத்துவது குறித்து ஆலோசித்துள்ளனர். அதற்கு முன்னோட்டமாக தொடர்ச்சியாக 100 நாட்கள் குடிக்காமல் இருப்பது என இருவரும் சபதம் எடுத்திருக்கிறார்கள். இதை உறுதியாக கடைப்பிடித்த சிவக்குமார் குடிக்காமல் 100 நாட்களைக் கடந்து விட்டார். ஆனால், சபதத்தில் உடன் வந்த அவரது நண்பர் பாதி வழியிலேயே மீண்டும் போதை வழிக்கு திரும்பிவிட்டார்.

அந்த பேனர்

இந்நிலையில், தான் 100 நாட்கள் மதுவை தீண்டாமல் இருந்தது சிவக்குமாருக்கே ஆச்சரியமாக இருந்திருக்கிறது. அந்த ஆச்சரியத்தை, ‘வெற்றிகரமாக 100 நாட்கள் மது அருந்தவில்லை’ என்று தனது போடோவுடன் கடை அருகே பேனராக வைத்துள்ளார். தனது நண்பர் சொன்ன சொல் மாறிவிட்டாலும் அந்த பேனரில், ‘எந்த நேரத்திலும் நிறம் மாறாத பூ நட்பு’ என மெசேஜும் சொல்லி இருக்கிறார் சிவக்குமார்.

இதுகுறித்து மீடியா மக்களிடம் பேசிய சிவக்குமார் ”மதுக் குடிக்காமல் இருப்பது தொடர்பாக எனக்கும், எனது நண்பருக்கும் போட்டி வைத்துக்கொண்டோம். அதில், நான் 100 நாட்கள் மது குடிக்கவில்லை. அதனை கொண்டாடும் விதமாக நானே என்னை வாழ்த்தி பேனர் வைத்துக் கொண்டேன். மதுக் குடிக்காமல் தினமும் பணத்தை சேமித்த பணத்தையும் சேர்த்து எனக்கிருந்த 80 ஆயிரம் ரூபாய் கடனை அடைத்துவிட்டேன். தற்போது உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனது மனமாற்றத்தை வரவேற்று பொதுமக்கள் எனக்கு வாழ்த்து தெரிவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

Exit mobile version