Tamil News

ரகசிய ஆவணங்கள் தொடர்பில் டிரம்ப் மீது பதியப்பட்டுள்ள 7 குற்றச்சாட்டுகள்

கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். இதனால் 4 ஆண்டுகள் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தார். பின்னர் 2020ம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் காரணமாக தோல்வி பெற்ற டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார். அப்போது டொனால்ட் டிரம்ப் தன்னுடன் ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்கச் சட்டத்தின்படி ஜனாதிபதிகள் தங்களின் பதவிக் காலம் முடிந்ததும் கையாண்ட அனைத்து ஆவணங்களையும் ஆவணக் காப்பகத்திடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் டிரம்ப் ‘க்ளாஸிஃபைட் டாக்குமென்ட்ஸ்’ என்ற மிக முக்கியமான ஆவணங்களை ஒப்படைக்காமல் எடுத்துச் சென்றதாகத் தெரிகிறது.

Donald Trump indicted on 7 counts in connection with classified documents probe | kens5.com

கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம் இது தொடர்பாக டிரம்ப்பின் புளோரிடாவில் உள்ள வீட்டில் சோதனை நடந்தது. அதனை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். நீதித்துறையினை ஆயுதமாகப் பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் தான் போட்டியிடுவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது அரசு ஆவணங்களை எடுத்துச் சென்றது, சதித்திட்டம் தீட்டியது, நீதித்துறை செயல்பாட்டை முடக்கியது உள்ளிட்ட 7 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது டிரம்ப் மீது பதிவு செய்யப்படும் இரண்டாவது குற்றச்சாட்டாகும். ஏற்கெனவே ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் அவர் சிக்கியிருந்தார். அமெரிக்காவின் அதிபர் தேர்தல் அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version