Site icon Tamil News

மளிகை கடையை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கோவை தடாகம், மாங்கரை, ஆனைக்கட்டி, ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் குடிநீர் தேடி வனப்பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து அடிக்கடி காட்டு யானைகள் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறுகின்றன.

இந்நிலையில் நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது மளிகை கடையை சேதப்படுத்தி கடையில் வைத்திருந்த சில உணவு பொருட்களை உட்கொண்டுள்ளது. இதனை அடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினார். இதனை அப்பகுதி மக்கள் அவர்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர்.

வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் யானைகள் நுழைந்தது ஊர்மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே அப்பகுதி மக்களும் விவசாயிகளும் வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு யானைகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே சமயம் வனப்பகுதிகளுக்கு உள்ளேயே காட்டுவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் உணவு ஆதாரங்களை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Exit mobile version