Site icon Tamil News

குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செங்கானம் புத்தாம்பூர் ஊராட்சியில் முறையாக குடிநீர் விநியோகம் இல்லாததால் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்.

அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோவில் தாலுகா புத்தாம்பூர், செங்கானம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பேயாடிக்கோட்டை , செங்கானம், பறையத்தூர், இடையூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 800-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள மக்களுக்கு அடம்பூர் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக இப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து ஆத்திரமடைந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்புணவாசல் ஆவுடையார்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு போராட்டம் நடத்துவதாக வருகின்ற மக்கள் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அனைத்தும் தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் இல்லை இப்பகுதியில் உள்ள குளத்தில் உள்ள நீரை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது வெயில் காலம் என்பதால் மேலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது வேதனையுடன் கூறினர். இந்த நிலையிலும் உரிய நடவடிக்கை இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டமாக தீக்குளிக்கவும் தயார் என பெண்கள் ஆவேசமாக கூறினர்.

போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொது மக்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Exit mobile version