Site icon Tamil News

குடியிருப்பு பகுதிக்குள் அமைக்கப்பட்டுள்ள இறால் பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா காரக்கோட்டை குளத்துள்வாய் கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தனியாருக்கு சொந்தமான 7 இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்க வேண்டிய இறால் பண்ணைகள் குடியிருப்பு பகுதிக்குள்ளே அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இறால் பண்ணைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இதனைக் கண்டித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பல்வேறு கட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லையென கூறப்படுகிறது.

இந்நிலையில் இறால் பண்ணைகள் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளை கடந்த நிலையில் அப்பகுதியிலுள்ள வீடுகளில் சுவர்கள் சிதிலமடைந்தும், விவசாய நிலங்கள் பாதிப்படைந்தும் காணப்படுகிறது.

எனவே ஆத்திரமடைந்த பொதுமக்கள் மணமேல்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மணமேல்குடி காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவல்த்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருவாய்த்துறை அதிகாரிகள் முன்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தையில் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளை கொண்டு பாதிப்பு நிலை குறித்து அறிந்த பின்பு இறால் பண்ணை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அது வரை தற்காலிகமாக இறால் பண்ணை இயங்காது என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்ற பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மீண்டும் பெரிய அளவில் போராட்டம் தொடரும் என அறிவித்தனர்.

Exit mobile version