Site icon Tamil News

அமெரிக்க அதிபர் தேர்தல்: செப்டம்பர் 4 அன்று கமலா ஹாரிஸுடன் நேரடி விவாதத்தில் பங்கேற்ற தயாரான டிரம்ப்

அமெரிக்க குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப், செப்டம்பர் 4ஆம் திகதி கமலா ஹாரிசுடன் விவாதத்தில் ஈடுபட ஒப்புதல் தெரிவித்துள்ளார்.‘டுருத் சோஷியல்’ ஊடகத்தில் வெளியிட்ட பதிவில் டிரம்ப் இதனை உறுதிப்படுத்தினார்.

செப்டம்பர் 4ஆம் திகதி இரு வேட்பாளர்களின் விவாதத்துக்கு ‘ஃபாக்ஸ் நியூஸ்’ ஏற்பாடு செய்யவிருப்பதாகத் தெரிகிறது.

“ஜோ பைடனுடன் விவாதம் நடந்தபோது இருந்த அதே விதிமுறைகள் இருக்க வேண்டும். ஆனால் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும்,” என்று டிரம்ப் கூறினார்.

கமலா ஹாரிஸ் பங்கேற்க இயலவில்லை அல்லது விரும்பவில்லை என்றால் அதே தேதியில் பிரசாரக் கூட்டத்தை நடத்தும் உத்தேச திட்டத்தை தமது பதிவில் டிரம்ப் வெளியிட்டிருந்தார். பின்னர் உத்தேச திட்டம் மட்டும் பதிவிலிருந்து நீக்கப்பட்டது.

பென்சில்வேனியாவில் விவாதத்தை நடத்த வேண்டும் என்பது டிரம்பின் விருப்பமாகும். இந்த மாநிலம்தான் தேர்தல் முடிவை நிர்ணயம் செய்யக்கூடிய போராட்டக் களமாக உள்ளது. ஃபாக்ஸ் நியூசின் படைப்பாளர்களான பிரட் பேயர், மார்த்தா மெக்கலம் ஆகியோர் நிகழ்ச்சி நெறியாளராக செயல்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஹாரிஸ் விவாதத்தையும் அதன் விதிமுறைளையும் ஏற்றுக் கொண்டாரா என்பது ஆகஸ்ட் 3ஆம் திகதி வரை தெரியவில்லை.

அவரது பிரச்சாரத்திற்கான பிரதிநிதிகளும் இது குறித்து பதிலளிக்கவில்லை. ஃபாக்ஸ் நியூஸ் ஊடகமும் இதன் தொடர்பில் பதில் சொல்லவில்லை.ஃபாக்ஸ் நியூஸ் விவாதம், பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.இதற்கு முன்பு ஜோ பைடனுடனான அவரது விவாதத்தில் பொதுமக்கள் யாரும் பங்கேற்கவில்லை.

ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஹாரிசை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.முன்னாள் அதிபரான டோனல்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியில் வேட்பாளர் மாற்றப்பட்டது குறித்து புலம்பியிருக்கிறார்

“மில்லியன் கணக்கான டொலர், நேரம் மற்றும் முயற்சியிடன் உறங்கிக்கொண்டே இருக்கும் ஜோவுடன் போட்டியிட்டேன். விவாதத்திலும் நான் வெற்றி பெற்றேன். ஆனால் தேர்தல் களத்தில் புதிய வேட்பாளரை களத்தில் இறக்கிவிட்டார்கள்,” என்று டிரம்ப் ஆகஸ்ட் 2ஆம் திகதி தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version